புதுடெல்லி: பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் தொடங்குகிறது. முன்னதாக, பிரதமர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம், 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் என்டிஎம்சி மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்கும் ஒரு பிரம்மாண்ட பேரணிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் பங்கேற்கும் பேரணியானது, டெல்லி பட்டேல் சாலையில் தொடங்கி நாடாளுமன்றம் இருக்கும் வீதி வரை நடைபெற இருக்கிறது. இந்த பேரணி முதலில் செவ்வாய்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக அக்கட்சி மிகப்பெரிய கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 50 கிமீ தூரத்திற்கு நடந்த மிப்பெரிய பேரணியில் கலந்து கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற இருக்கும் பேரணி காரணமாக டெல்லியின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்றும் பேரணிக்காகவும், போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாடு குறித்து பாஜ கட்சியின் பொதுச்செயலாளர், வினோத் தாவ்டே கூறுகையில், “நல்லாட்சி, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் அதிகாரமளித்த இந்தியா, விஸ்வ குரு பாரத் உள்ளிட்ட ஆறு வெவ்வேறு கருப்பொருள்களில் ஒரு மெகா கண்காட்சி இரண்டு நாள் செயற்குழு கூட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த தேசிய செயற்குழு மாநாட்டிற்கு முன்பாக, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில பிரவு தலைவர்கள், பல்வேறு அமைப்புச் செயலாளர்களின் கூட்டம் பாஜகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.