தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு சென்னை உட்பட 12 கடலோர மாவட்டங்களில் கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பருவ மழையை எதிர்கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர், திரு.வி.க.நகர், எழும்பூர், சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட க்ரே நகர், அசோகா அவன்யூ, ஜி.கே.எம், காலனி, 70அடி சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்கனவே கடந்த 7 ஆம் தேதி ஒரே நாளில் சென்னையில் 23செ.மீ மழை பெய்த நிலையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. குறிப்பாக வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகள் அதிக பாதிப்புகளை சந்தித்தது.

இந்நிலையில் பருவ மழை தொடர்வதால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் மற்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்டீவன்சன் சாலையில் நடைபெற்றுவரும் பால வேலைகளை பார்வையிட்ட முதலமைச்சர், பெரவலூர் காவல் நிலையம் அருகில் குளம் போல் தேங்கியிருந்த வெள்ள நீரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, சென்னை உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குமரி கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிக அளவில் மூன்று இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், 70 இடங்களில் கனமழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.