ஈரோடு மாவட்டம் கொளத்துப்பாளையத்தில் இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்கு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் கொளத்துபாளையம் கிராமத்தில் குரங்கன்பள்ளம் ஓடையில் இரண்டு தடுப்பணைகளை கட்டுவதற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஊர் பொதுமக்கள் சார்பாக தங்கவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படும் என்றும், வீடுகள் மூழ்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றும் கூறியதுடன், தற்போதைய நிலையில் தடுப்பணை தேவையில்லை எனத் தெரிவித்து தடுப்பணைகள் கட்டுவதற்கான அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் இரண்டு தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை எனக் கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.