மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்வும், கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடும் நிகழ்வும் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில் சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டன.
அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர் வழங்கப்படும். முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படும். கிராம சபை போல, தங்களது வார்டுக்கு என்ன தேவை என்பதை அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு உயர்தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி அமைத்து குப்பைக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். பொது இடங்களில் தேவையான கழிப்பிடங்கள் உறுதி செய்யப்படும். வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும். பள்ளிகள், மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். முறையான பராமரிப்புடன் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம்மற்றும் நூலகம் அமைக்கப்படும். முறையான மழைநீர் வடிகால்கள் ஏற்படுத்தப்படும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும். கட்டிட வரைபட அனுமதிகள் விரைவாக லஞ்சமில்லாமல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
நாங்கள் வெற்றி பெற்றால் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று கூறி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.