மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக விசாரணை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சிறைக் கைதிகள் உரிமைகள் நல மைய இயக்குநரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான பி.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘மதுரை மத்திய சிறையில் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் கைதிகள் மூலமாக தயாரிக்கப்பட்ட மருத்துவப் பொருட்கள், எழுது பொருட்களை அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு அனுப்பியுள் ளதாகவும், சிறைக் கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலியாக கணக்கு காட்டி ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக திரட்டிய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிறைத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது.

எனவே இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசார ணைக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார். இதன் விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள் இந்த புகார் தொடர்பாக மனுதாரர் குற்ற விசாரணை முறைச்சட்டப்படி சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம், என அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

அதேநேரம், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது, எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.