இது பள்ளி மாணவர்களின் தேர்வுக்காலம். எல்லாக் கல்வி ஆண்டிலும் மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிந்துவிடும். இந்தக் கல்வி ஆண்டில் மட்டும்தான் தாமதமாகப் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றுவருகின்றன. வழக்கம்போல எல்லா ஊர்களிலும் இது திருவிழாக் காலம்தான்.
இந்த ஆண்டு இது தேர்வுக்காலம் என்பதால், திருவிழாக்களே நடத்தக் கூடாது என்று கூறவும் கூடாது, கூறிவிடவும் முடியாது. அது மக்களின் பண்பாட்டு மனநிலைக்கு எதிரானதாக அமைந்துவிடக்கூடும். அதேவேளையில், திருவிழாக் காலத்தில் மாணவர்களின் தேர்வுக்காலமும் வருவதால், திருவிழா நடைமுறைகளில் இந்த ஆண்டு மட்டும் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நல்லது.
ஊர்த் திருவிழா குறைந்தது நான்கு நாட்களாவது நடைபெறுகிறது. இந்த நான்கு நாட்களும் நாள் முழுக்க ஒலிபெருக்கிகள் ஒலிப்பது, தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் கவனத்தைச் சிதறடித்துச் சீர்குலைத்துப் படிப்பதற்குத் தடங்கல்களை ஏற்படுத்தும். இதுபோன்ற விஷயங்கள் அதிகம் இல்லாத நகரத்துவாசிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமா என்று தோன்றலாம்.
ஆனால், வசதி வாய்ப்புகள், கற்றலுக்கான வாய்ப்புகள், மின்சாரம், இணையம் போன்ற ஏராளமான விஷயங்களில் நகரத்து மாணவர்களோடு ஒப்பிடும்போது, கிராமத்து மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில், சமமற்ற தளத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால், இரண்டு மாணவர்களுக்கும் ஒரே தேர்வு எனும் சமதளத்தில் போட்டி வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வான நிலையில், திருவிழாக்களின் ஒலிபெருக்கிகள் வழியாக கிராமத்து மாணவர்களுக்கு ஏற்படும் இடையூறு அவர்களின் எதிர்காலத்தைப் பாதித்துவிடக் கூடாது அல்லவா!
ஏற்கெனவே, கரோனா காலத்தில் கற்றலில் நாட்டமில்லாமல், கற்பித்தல்-கற்றலில் தொடர்ச்சி இல்லாமல் இருந்த மாணவர்கள், இரண்டு ஆண்டுகளாகப் பொதுத்தேர்வு / ஆண்டுத் தேர்வு எதையும் எழுதவில்லை; எதிர்கொள்ளவும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் மிகக் குறுகிய காலத்துக்குள் தேர்வு அனுபவத்தை எதிர்கொள்ளவிருக்கின்றனர்.
ஆகவே, நம் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு, இந்தக் காலத்தில் மட்டுமாவது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல் திருவிழாக்களைக் கொண்டாடலாம்.
மாணவர்களின் படிப்பில் கவனச் சிதறலையும் இடையூறையும் ஏற்படுத்தாமல் இருக்க ‘ஒலிபெருக்கி இல்லா திருவிழாக்கள்’ கொண்டாடுவதுதான் சாலச் சிறந்ததாக இருக்கும்.
கல்வியாளர்கள், கல்வித் துறையினர், அரசு நிர்வாகிகள், காவல் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அனைவரும் மாணவர்களின் தேர்வுக் காலத்தை, படிப்புக்கு உகந்த காலமாக உருவாக்கித் தருவதற்கு முன்வர வேண்டும்.