கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் 12ம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
11.07.2022 மற்றும் 12.07.2022 தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13.07.2022 முதல் 15.07.2022 வரை : கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) 14, அவலாஞ்சி (நீலகிரி) 10, சின்கோனா (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 9, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 8, க்ளென்மார்கன் (நீலகிரி) 7, நடுவட்டம் (நீலகிரி) 6, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 5, பெரியார் (தேனி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 4
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
11.07.2022, 12.07.2022: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.07.2022, 12.07.2022: ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.07.2022 முதல் 15.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன்காரணமாக மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.