சென்னை புத்தகக் காட்சியை இம்மாதம் 16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் (பபாசி) சென்னை புத்தகக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். சுமார் ரூ.100 கோடி மதிப்பில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தேங்கியிருப்பதால், புத்தகக் காட்சியை விரைவில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் பபாசி அமைப்பினர் கோரிக்க வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து விட்டு, இதுகுறித்து முடிவை தெரிவிப்பதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
45-வது சென்னை புத்தக காட்சி கடந்த ஜன.6-ம் தேதி முதல் ஜன.23-ம் தேதி வரை நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. அந்தசமயத்தில் அதிகரித்த கரோனாப் பரவல் காரணமாக சென்னை புத்தகக் காட்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படடது.
இந்த நிலையில், கரோனா பரவல் குறையத் தொடங்கியதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில், வரும் பிப்.16-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை சென்னை புத்தகக் காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.