ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், ஓர் இடத்தில் மட்டும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. விளையாடச் செல்பவர்கள் தொடங்கி பணிக்குச் செல்பவர்கள் வரை அனைவரும் அங்கு இருந்தனர்.

மற்றொரு நாள் இரவு 7 மணி. சென்னையில் முக்கிய இடத்தில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். அந்த வரிசையில் நின்று நானும் அதை வாங்கிக் கொண்டு, அந்த இடத்திற்குச் சென்றேன்.

இந்த இரண்டு காட்சிகளும் நான் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்த காட்சிகள். சென்னை மெட்ரோ ரயில் தொடங்கிய காலத்தில் “ஈ” அடித்து வந்த அந்த நவீன ரயில் பெட்டிகள் இன்று “ஈ” நுழைய கூட வழி இல்லாமல் உள்ளது. அந்த அளவு மெட்ரோ ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

கடந்த மார்ச் மாதம் மெட்ரோ ரயிலில் 44.67 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 45.46 லட்சமாக உயர்ந்துள்ளது. இதைப் போன்று மே மாதம் 47.87 லட்சம் பேர் மெட்ரோ ரயில் மூலம் தங்களின் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இப்படி ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஜனவரி மாதம் தினசரி 81 ஆயிரம் பேர், பிப்ரவரி மாதம் தினசரி 1.13 லட்சம் பேர், மார்ச் மாதம் தினசரி 1.43 பேர், ஏப்ரல் மாதம் தினசரி 1.51 லட்சம் பேர், மே மாதம் தினசரி 1.59 லட்சம் பேர் என்று சென்னை மெட்ரோ ரயிலில் தினசரி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

 

கடந்த மே மாதம் பயணித்தவர்களில் 11.58 லட்சம் பேர் க்யூ ஆர் கோடு மூலம் தங்களின் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 28.64 லட்சம் பேர் பயண அட்டை மூலம் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். பயண அட்டை மூலம் பயணிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தினசரி மெட்ரோ ரயிலை பயன்படுத்துபவர்கள். இதற்கு முக்கியக் காரணம், பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு கட்டணத்தில் வழங்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடிதான் .

இதைத் தவிர்த்து அதிக முறை பயணிப்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன்படி ஒவ்வொரும் மாதமும் அதிக முறை பயணித்த முதல் 10 பயணிகள், மாதம் ஒரு பரிவர்த்தனையில் ரூ.1,500 மேல் பணம் செலுத்திய முதல் 10 பயணிகள், பயண அட்டையில் குறைந்தபட்ச தொகையான ரூ.500 டாப்அப் செய்த 10 பயணிகள் என 3 வகையான பிரித்து பரிசுகள் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவும் மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் 2009-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து முதல் மெட்ரோ ரயில் சேவை 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சேவையானது ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை இயக்கப்பட்டது. இந்த காலக் கட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, கட்டணம் அதிகமாக உள்ளதாக கூறி பலரும் மெட்ரோ ரயில் பயணத்தை விரும்பவில்லை.

சென்னையில் தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் வரையும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பாதையை இணைக்கும் ரயில் நிலையங்களாக சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த தடங்களில் மொத்தம் 40 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சுரங்கத்தில் 20 நிலையங்களும், தரைக்கு மேல் 20 நிலையங்களும் உள்ளன.

 

தற்போது சென்னையில் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு மெட்ரோ ரயில் நிலையம் மூலம் செல்ல முடியும். அண்ணா சாலையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பலர் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கி விட்டனர். விமான நிலையம் செல்பவர்களின் அதிகம் பேர் மெட்ரோ ரயிலைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்திபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

எனவே, சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களின் போக்குவரத்தாக மாறி வருகிறது என்றால், அது மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன்