இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கோலியிடம் முன்னர் ஒருமுறை சொன்னதாக தெரிவித்துள்ளார், அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர். இதனை அவர் எழுதியுள்ள ‘Coaching Beyond – My days with the Indian cricket team’ என்ற புத்தகத்தில் சொல்லியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் மூன்று தொடர்களிலும் கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்றால் அது கிரிக்கெட் உலகில் மகேந்திர சிங் தோனி மட்டும்தான். அவருக்கு பிறகு இந்திய அணியை வழி நடத்தியவர் கோலி. முதலில் அவர் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்தினார். தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளையும் வழி நடத்த தொடங்கினார்.

ஆனால், டெஸ்ட் அணியை வழி நடத்திய கோலி ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட சில காலம் காத்திருக்க வேண்டி இருந்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவர் அந்த பொறுப்பை ஏற்க மிகவும் ஆர்வமாக இருந்ததாக ஸ்ரீதர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

2016-ல் டி20 மற்றும் ஒருநாள் அணியை வழி நடத்த கோலி மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் அப்போது சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அது அந்த பொறுப்பில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது. அப்போதுதான் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு மாலை நேரத்தில் கோலிக்கு போன் செய்தார்.

‘இங்க பாருங்க விராட். தோனிதான் உங்களிடம் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சி பொறுப்பை கொடுத்தார். அவரை நீங்கள் மதிப்பது அவசியம். சரியான நேரத்தில் ஷார்டர் பார்மெட் கேப்டன் பொறுப்பையும் அவர் உங்களிடம் கொடுப்பார். அதுவரை நீங்கள் அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாளை உங்களை அணியினர் மதிப்பது கடினம். நீங்கள் அதன் பின்னால் ஓட வேண்டாம். அது உங்களை தேடி வரும்’ என ரவி சாஸ்திரி சொல்லியிருந்தார்” என ஸ்ரீதர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

கோலி தலைமையிலான இந்திய அணியில் 2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தோனி விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஆர்எஸ் முடிவுகளை எடுக்கும் போது தோனியிடம் ஆலோசனை பெறுவதை கோலி வழக்கமாக கொண்டிருந்தார்.