ஆந்திராவில் கடந்த திங்கட்கிழமை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், இண்டர்மீடியட் பள்ளிகளும் ( 2) திறக்கப்பட்டன. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி இவை இயங்கி வருகின்றன.
இந்நிலையில், கரோனா 3-வது அலையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, “கிராம, வார்டு செயலகங்களை கரோனா பரிசோதனை மையங்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் யாருக்கேனும் கரோனா அறிகுறி இருந்தால் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
இதற்காக அந்த நேரத்தில் குறிப்பிட்ட பள்ளியிலேயே கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய சடங்குகளுக்கு செல்வோர், முன் அனுமதி பெற வேண்டும். மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்” என்றார்.