குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை அடையாறு பூங்கா ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாடை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை வளாகத்தில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் நாள்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் அவர் உரையாடுவதும், ஊழியர்கள் நலம் விசாரிப்பதும் வாடிக்கையான ஒன்று.
இந்த நிலையில், வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.