சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கோட்டை வேங்கைப்பட்டியில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 8) திறந்து வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை வேங்கைப்பட்டியில் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்த வைத்து, சமத்துவபுர வளாகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையினையும் திறந்து வைத்தார்.

அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பெயரில் மறைந் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும்.மறைந்த முதல்வர் கருணாநிதியால், சிவகங்கை மாவட்டத்தில் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு, 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது. 9-வது சமத்துவபுரமாக 2010-2011 ஆம் நிதியாண்டில் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த சமத்துவபுரம் கோட்டை வேங்கைப்பட்டி கிராமத்தில் 12.253 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள், தலா ரூ.1.92 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் ரூ.2.25 லட்சம் மதிப்பீட்டில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து பார்வையிட்ட தமிழக முதல்வர், பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி, அவர்களுடன் உரையாடினார்.

இச்சமத்துவபுரத்தில் தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பிற்காக ரூ.15.87 லட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூ.2.92 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அண்ணா விளையாட்டுத்திடல் ரூ.1.01 லட்சம் மதிப்பீட்டில் கைப்பந்து, கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடனும், சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் கலைஞா் சிறுவர் பூங்கா ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெருக்களில் ரூ.4.80 லட்சம் மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.96.39 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும், மழைநீர் வடிகால் வசதிகள், ரூ.54.29 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர், இவ்வளாகத்தில் ரூ.4.38 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தையும், ரூ.8.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் நூலகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. மதுசூதன் ரெட்டி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.