இந்திய பேட்மிண்டன் வீரர் லக்ஷ்யா சென், நடப்பு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தத் தொடர் நடப்பு ஆண்டில் நடக்கும் எட்டாவது பேட்மிண்டன் உலகக் கூட்டமைப்பு (BWF) உலக டூர் தொடராகும்.

இன்று தொடங்கியுள்ள இந்தத் தொடர் வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சோய் ஜி-ஹூனை எதிர்த்து விளையாடினார் லக்ஷ்யா சென். முதல் செட்டை 14-21 என்ற கணக்கில் அவர் இழந்தார். இருந்தாலும் தனது லட்சத்தியத்தை தளர விடாத லக்ஷ்யா அடுத்த இரண்டு செட்டையும் 21-16, 21-18 என கைப்பற்றி ஆட்டத்தை வென்றார். அவர் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான உலகத் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள வீரர். இரண்டாவது சுற்றில் இந்தோனேசிய வீரருடன் பலப்பரீட்சை செய்கிறார் லக்ஷ்யா.

தென் கொரியாவின் சான்சீயோன் நகரில் உள்ள உள்ளரங்கில் சுமார் 62 நிமிடம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்ஷ்யா சென்னுக்கு கடுமையான சவாலை கொடுத்தார் கொரிய வீரர் சோய் ஜி-ஹூன். கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் லக்ஷ்யா சென். அது தவிர ஜெர்மன் மற்றும் ஆல்-இங்கிலாந்து ஓபன் தொடர்களின் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடி இருந்தார்.

பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி ஆகிய இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்கள் இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளனர். மற்றொரு இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய் முதல் சுற்றில் தோல்வி பெற்று தொடரை விட்டு வெளியேறி உள்ளார். ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.