தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர். மனுவை வாங்க ஆட்சியர் வராததால், ஆட்சியரகத்தில் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்குக் கர்நாடக அரசு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கியதைக் கண்டித்தும், ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரி அமைப்பதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 2,500-ம், கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4,000-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகம் முன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் பி. அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்ப்பாட்டக் களத்துக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் வந்து மனுவை பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆட்சியரை சந்திப்பதற்காக விவசாயிகளைக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற விவசாயிகள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 5 அல்லது 10 பேர் மட்டுமே உள்ளே வந்து மனு அளிக்க ஆட்சியர் அனுமதி அளித்தார். இதை ஏற்க மறுத்த விவசாயிகள் சங்கத்தினர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல் துறையினர் மீண்டும் ஆட்சியரகத்துக்குள் அழைத்துச் சென்றனர்.

அப்போது காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயி ஒருவர் தன்னுடைய ஆடைகளை முழுமையாகக் கலைந்து கூச்சலிட்டார்.

பின்னர், விவசாயிகளில் சிலரை மட்டும் ஆட்சியரைச் சந்திப்பதற்காகக் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அப்போது, ஆட்சியரை விவசாயிகள் சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனு வழங்கினர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.