ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில், பலத்தை நிரூபிப்பதற்காக தேமுதிக போட்டியிடுகிறது, என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: மக்கள் மத்தியில் விஜய காந்துக்கும், எங்களது கட்சி வேட்பாளருக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. முரசு சத்தம் கேட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். அதை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறோம்.

எங்கள் பலத்தை நிரூபிக்கும் தேர்தலாக இது இருக்கும். எல்லா தேர்தலிலும் பணப்புழக்கம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அந்த நேரத்தில் தலைவர் விஜய காந்த் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.