பீகார் என்.ஐ.டி.யில் நடந்த வளாக நேர்க்காணலில் ஃபேஸ்புக் நிறுவனம் பொறியியல் பட்டதாரி மாணவியை ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளத்தில் வேலைக்கு எடுத்தது.

கரோனா காலத்தில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாகிவிட்டது. கரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் உலகெங்குமே பொருளாதார நெருக்கடி. அதற்கு மத்தியில் எதிர்பார்த்த வேலை, கை நிறைய சம்பளம் போன்றவை எல்லாம் கானல் நீராகிவிட்டன. கரோனா காலம் தொடங்கி, இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது அதிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகிறார்கள். இந்நிலையில் புதிய வேலை வாய்ப்புகளும் இளைய தலைமுறையினருக்குக் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

வளாக நேர்க்காணல்

கடந்த 2020, 2021-ஆம் ஆண்டைப் போல அல்லாமல் இப்போது மிக அதிகபட்ச சம்பளத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கல்லூரி படிப்பை முடித்த மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. நிறுவனங்களும் திறமையானவர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் (என்.ஐ.டி.) எலெக்ட்ராணிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறையில் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி அதிதி திவாரிக்கு இந்த ஆண்டு நடைபெற்ற வளாக நேர்க்காணலில் ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கிறது. பாட்னா என்.ஐ.டி.யில் படித்த ஒருவர் வளாக நேர்க்காணல் மூலம் பெறும் மிக உயர்ந்த சம்பளம் இதுவாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற வளாக நேர்க்காணலில் அதிகபட்ச சம்பளமாக ரூ.50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை மட்டுமே மாணவர்கள் பெற்றனர்.

ஆனால், இந்த ஆண்டு அது தலைகீழாக மாறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகால கரோனா காலத்துக்கு பிறகு பீகார் என்.ஐ.டி.யில் இந்த ஆண்டு வளாக நேர்க்காணலில் பங்கேற்ற எல்லோருக்குமே வேலை கிடைத்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வளாக நேர்க்காணல்கள் மூலம் வேலை வாய்ப்புகள் நிரப்பட்டுள்ளன. இதன்மூலம் பாட்னா என்.ஐ.டி.யில் கரோனாவுக்கு முந்தைய காலம் உருவாகி வருவதாக அக்கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

யார் இந்த அதிதி?

தற்போது ரூ.1.6 கோடி சம்பளத்தில் வேலை வாய்ப்பைப் பெற்ற மாணவி அதிதி திவாரி ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணைய உள்ளார். இவர் ஃபேஸ்புக் நிறுவனத்தில் முன்னணி பொறியாளர்களின் வரிசையில் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் ஜாஷெட்பூரில்தான் இவருடைய வீடு உள்ளது. இவருடைய தந்தை சஞ்சய் திவாரி டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய தயார் அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது மகள் மிகப் பெரிய நிறுவனத்தில் பெரிய சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெறுள்ளார்.