சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியிறுத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.5.2022) மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான இடையூறுகள் குறித்து எடுத்துரைத்தார். பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.

முன்னதாக, தமிழக முதல்வர் கடந்த 19.1.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும், தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தித்து வரும் கடுமையான நிலையினையும் விளக்கி மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

மேலும், பிரதமருக்கு 16.5.2022 அன்று பருத்தி மற்றும் நூல் விலை உயர்வினால் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய நிதித்துறை அமைச்சரை நேற்று இது தொடர்பாக சந்தித்து, பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரின் கடிதத்தை அளித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.