தமிழகத்தில் 67 லட்சம் வீடுகளுக்கு வரும் 2030-ம் ஆண்டுக்குள் குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன செயல் இயக்குநர் ஜெயதேவன் கூறியுள்ளார்.
இந்தியன் ஆயில் நிறுவனம், தனது கூட்டு முயற்சி நிறுவனமான இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்துடன் இணைந்து, சென்னைஎண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி இறக்குமதி முனையத்தை அமைத்துள்ளது. இந்த முனையத்தின் செயல்பாடுகளை நேரடியாக விவரிக்கும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்றுநடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜெயதேவன் கூறியதாவது:
எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு மிகவும் பாதுகாப்பான, விலை குறைவான, மிக குறைந்த மாசு உமிழ்வை கொண்ட தூய்மையான எரிபொருளாக திகழ்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்த எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, காமராஜர் துறைமுகத்தில் எல்என்ஜி முனையம் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
திரவ வடிவத்தில் இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, இந்த முனையத்தில் சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் வாயுவாக மாற்றப்பட்டு ஆட்டோமொபைல், மின்னுற்பத்தி நிலையங்கள், உர உற்பத்தி தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளிட்டவற்றுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
திரவ எரிவாயுவை கொண்டு செல்ல, சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை 1,500 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் இப்பணி முழுமையாக நிறைவடையும்.
விலை குறைவு
முதல்கட்டமாக, 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் 67 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கப்படும். அடுத்த கட்டமாக, 22 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். தற்போது வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் எல்பிஜி சிலிண்டரைவிட 15 சதவீதமும், பெட்ரோல், டீசலைவிட 50 சதவீதமும் எல்என்ஜி எரிவாயு விலை குறைவாக இருக்கும்.
வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாக எல்என்ஜி எரிபொருள் பயன்படுத்தப்படும். அதன்படி, சிஎன்ஜி எரிபொருளை விநியோகம் செய்ய, தமிழகம் முழுவதும் 25 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 8 ஆண்டுகளுக்குள் மொத்தம் 1,131 சிஎன்ஜி விற்பனை நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கே.ராமு, தலைமை செயலாக்க அதிகாரி சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.