நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கரோனாவில் உயிரிழந் தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் சரியாக நிவாரண நிதி வழங்கவில்லை அல்லது கால தாமதம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
வருவாய் ஈட்டக் கூடிய முக்கிய நபர் கரோனா தொற்றால் உயிரிழந்த காரணத்தால், பல குடும்பங்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு ரூ.50,000 நிவாரண நிதி வழங்குவது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். இந்த நிதியை வழங்காமல் இருப்பது அல்லது தாமதம் செய்வதை ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் நாங்கள் நேரடியாக தலையிட நினைக்கிறோம். ஆந்திராவில் மொத்தம் 36,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், அவற்றில் 31,000 விண்ணப்பங்கள் மட்டுமே சரியானவை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெறும் 11,000 விண்ணப்ப தாரர்களுக்கு மட்டும் இதுவரை நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
பிஹாரில் 12,000 பேர் மட்டும் கரோனாவால் உயிரிழந் துள்ளதாக கூறுவதை ஏற்க முடியாது. உண்மையான உயிரிழப்பு எண் ணிக்கைக்கும் நிவாரணம் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கும் நிறைய இடைவெளி உள்ளது. தகுதியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்காமல் இருப்பது, இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை மாநில அரசுகள் மதிக்கவில்லை என்று அர்த்தமாகிறது. அவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது. இதற்கு ஆந்திரா, பிஹார் மாநில தலைமை செயலாளர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆந்திரா, பிஹார் மாநில அரசுகள் சட்டத்துக்கு மேலானவை கிடையாது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
ஏற்கெனவே நடைபெற்ற விசாரணையின் போது கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை எவ்வளவு? நிவாரண நிதி கோரி எத்தனை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன? அவற்றில் எத்தனை பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது? நிவாரண நிதி பட்டுவாடாவக்கு ஆன்லை ன் போர்ட்டல் உள்ளதா என உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை கேட்டிருந்தது.
இந்த விஷயத்தில் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி விரைந்து சென்று சேர குஜராத் அரசு உருவாக்கிய எளிய நடைமுறையை மற்ற மாநிலங் களும் பின்பற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.