“முதல்வர் மீதான நம்பிக்கையில்தான் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்“ என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி மாநகராட்சி 58-வது வார்டுக்குட்பட்ட கிராப்பட்டி சிறுமலர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை தனது தாயார் மாலதி, சித்தப்பா அன்பில் பெரியசாமி ஆகியோருடன் வாக்களித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருச்சி மாவட்டம் முழுவதும் காலை முதலே அதிக ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
முதல்வரிடம் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருவதை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அந்த நம்பிக்கையில்தான் தங்கள் கோரிக்கைகளை மனதில் நிறுத்தி இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைகள், தேவைகள் எல்லாம் படிப்படியாக நிறைவேற்றும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கும். இந்தத் தேர்தல் மிகவும் நேர்மையாகவே நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் யாருக்கு செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்பது தெரியவரும். எந்தக் கட்சிக்கு வாக்களித்தால் வேலைகள் நடக்கும் என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர்.
தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதில் சின்னம் பதிந்துள்ளதால் போட்டி வேட்பாளர்களால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1,200 கோடிக்கும் மேலான மதிப்பில் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் தாக்கம் மக்களிடத்தில் தெரிகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு முதல்வர் வந்து சென்ற பிறகு அவருக்கான ஆதரவு இரு மடங்கு பெருகியுள்ளது. எனவே, திமுக நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறும்” என்றார்.