மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, அமைச்சர் பி.மூர்த்தி, தனது மகன் திருமணத்தை ரூ.30கோடி செலவில் மிக ஆடம்பரமாக நடத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியது: எனது மகன் திருமணத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவித்து உணவருந்த ஏற்பாடு செய்தேன். ஒரு இலை உணவுக்கு ரூ.300 செலவாகியிருக்கும். எனது தொகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள், திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சித் தொண்டர்களும் எனது அழைப்பை ஏற்று பங்கேற்றனர்.
அரசியல் நாகரிகமற்றது: மொத்தம் 50 ஆயிரம் பேர் உணவருந்தியிருந்தாலும் அதற்கான செலவு ரூ.1.50 கோடி ஆகியிருக்கும். மக்கள் உணவருந்த தகரக் கொட்டகை அமைத்து துணியை கட்டியிருந்தேன். வாழை மரம், கரும்பு தோரணம் அமைக்க சில லட்ச ரூபாய் ஆகியிருக்கும். மொத்த திருமணச் செலவே ரூ.3கோடிக்கும் குறைவுதான். அப்படிஇருக்க ரூ.30 கோடி செலவு என முன்னாள் முதல்வர் பழனிசாமி கூறியிருப்பது அரசியல் நாகரிகமற்றது.
திருமணத்தில் சாப்பாடு போட்டதை எத்தனை முறை அரசியல் செய்வது, ஒருவர் ரூ.1000 கோடி செலவு என்கிறார். இன்னொருவர் ரூ.150 கோடி என்றும் ரூ.100 கோடி என்றும் கூறுகின்றனர். இதைப்போய் பிரம்மாண்டம் என்கிறார்கள். அதிமுக ஆட்சியைப் போல கோடிக் கணக்கில் செலவழித்து பகட்டாக நடந்து கொண்டோமா? அதிமுக ஆட்சியில் வணிகவரி, பத்திரப்பதிவுத் துறையில்என்றாவது முதல்வராக இருந்த பழனிசாமி ஆய்வு நடத்திஉள்ளாரா எதுவுமே இல்லை. ஆனால், கடந்த 16 மாதங்களில் வணிகவரி பதிவுத்துறையில் 100 மடங்கு மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இத்துறையில் இன்றுவரை ரூ.74 ஆயிரம் கோடி வருமானம் வந்துள்ளது. இவ்வாறு கூறினார்.