உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கருங்கடல் பகுதியில் போர்கப்பல்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் இப்பகுதி மூலமான சரக்குக் கப்பல் போக்குவரத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் முடங்கியுள்ளது.

உக்ரைனிடமிருந்து அதிக அளவில் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்தியாவிடம் இருந்து கோதுமையை இறக்குமதி செய்ய முன்வந்தன. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி அதிகபட்ச அளவைத் தொட்டது.

ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்படும் சூழல் உருவானது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்குத் தடை விதித்தது.

இதனால் சர்வதேச சந்தையில் கோதுமை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு டன் கோதுமை விலை 453 டாலராக உயர்ந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய போது, உணவு தானிய விநியோகம் பாதிக்கும் சூழல் உருவானது. அப்போது பற்றாக்குறையை சமாளிக்கத் தேவையான கோதுமையை விநியோகம் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. அத்துடன் போதுமான அளவுக்கு கையிருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது இந்திய அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதை 7 தொழில்துறை நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இந்த நடவடிக்கையால் உணவு தானியங்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளதாக அவை சுட்டிக்காட்டியுள்ளன.