கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பொழிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.15 வரை நீட்டித்து உத்தர விடப்படுகிறது.
ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல கேரள மாநிலத்துக்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. ஏற் கெனவே செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப் படும். கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அவ சியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டு்ம். கரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும்கூட, கரோனா மேலாண்மைக்கான தேசிய வழி காட்டு நடைமுறைகளில் குறிப் பிட்டுள்ளபடி, பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினைக் கடைப்பிடிப் பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட் டாயம் பின்பற்ற வேண்டும். நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: கேரளாவில் தற்போது கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு பொதுப் போக்குவரத்தை அனுமதித்து முதல்வர் அறிவித்துள்ளார். இதன்படி, கேரளாவுக்கு சென்னை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.