திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடியை தாண்டியுள்ளது.

பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானமும் கனிசமாக உயர்ந்துள்ளது.

கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,500 கோடி வரை உண்டியல் வருவாய் கிடைத்துவரும் நிலையில் கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

22.62 லட்சம் பக்தர்கள்

மேலும் கடந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.