பெருந்தொற்று, ஊரடங்கு, மழை வெள்ளம் எனப் பற்பல இன்னல்களை அனுபவித்து வரும் தமிழக மக்களின் சிரமங்களைக் களையும் அம்சங்கள் இல்லாத ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி இன்று விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழக மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் பற்றியோ, உடனடியாக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியவை பற்றியோ ஏதும் இல்லாத ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. வழக்கமான கழக அரசுகளைப் போல திமுகவின் புகழ் மாலையாக மட்டுமே புனையப்பட்டிருக்கும் ஆளுநர் உரையில் ஆக்கபூர்வமான திட்டங்கள் பற்றிப் பேசப்படவில்லை.

தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு ஆர்.என்.ரவி ஆற்றிய முதல் உரை இது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்ய இருக்கும் நிதிநிலை அறிக்கை பற்றிய முன்னோட்டமோ அல்லது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன் அளித்த வாக்குறுதிகள் பற்றியோ ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

மகளிர் உரிமைத் தொகை, கல்விக் கடன் ரத்து, மாதம் ஒருமுறை மின் கட்டணம், அரசுப் பணியிடங்கள் நிரப்புதல், முதியோர் உதவித்தொகை உயர்த்துதல், பெருகிவரும் வேலைவாய்ப்பின்மையைத் தீர்க்க செயல் திட்டங்கள், சமையல் எரிவாயு மானியம், பிற மாநிலங்களைப் போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது, நீட் தேர்வு ரத்து, எழுவர் விடுதலை, தமிழக மீனவர் பிரச்சினை, மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், சென்னையின் வெள்ளப் பிரச்சினை, சிறுகுறு தொழில்களின் தள்ளாட்டம், விண்முட்டும் விலைவாசி உள்ளிட்ட எந்தப் பிரச்சினையைப் பற்றியும் தீர்க்கமான திட்டங்கள் இல்லை.

பெருந்தொற்று, ஊரடங்கு, மழை வெள்ளம் என பற்பல இன்னல்களை அனுபவித்து வரும் தமிழக மக்களின் சிரமங்களைக் களையும் அம்சங்கள் இல்லாத ஆளுநர் உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

ஆளுநர் தன் உரையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால், சட்டமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு அவர் பார்வைக்கு வந்துள்ள தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். இந்த முரண்பாடு கண்டிக்கத்தக்கது.

தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் ஆப்டிக்ஸ் அரசியலில் இருந்து கழக அரசு தன்னை விடுவித்துக்கொண்டு தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்க வேண்டும். அதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் அமையவேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்பார்க்கிறது” என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.