நடப்பு பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர். இதன் மூலம் சூப்பர் 750 தொடரில் பட்டத்தை வென்ற முதல் இந்திய இணையர் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர். தைவான் நாட்டு வீரர்களை 21-13 மற்றும் 21-19 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்த வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.
கடந்த 25 முதல் 30-ம் தேதி வரையில் இந்த தொடர் நடைபெற்றது. மொத்தம் 11 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். இந்த தொடர் கடந்த 1935 முதல் நடைபெற்று வரும் தொடர். இதில் சாத்விக் மற்றும் சிராக் இணையர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர்.
காமன்வெல்த் போட்டிகளில் தங்கம், தாமஸ் கோப்பை பட்டம், ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் மற்றும் இந்தியன் ஓபன் சூப்பர் 500 தொடரில் பட்டம் என இந்த இணையர் நடப்பு ஆண்டில் மட்டும் வெற்றிகளை குவித்துள்ளனர்.
மொத்தம் 48 நிமிடங்கள் நடைபெற்ற பட்டத்திற்கான இறுதிப் போட்டியில் 21-13 மற்றும் 21-19 என நேர் செட் கணக்கில் சாத்விக், சிராக் இணையர் வெற்றி பெற்றுள்ளனர். அட்டாக் செய்து ஆடும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாக இது பார்க்கப்பட்டது. இருந்தும் அதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 44,400 அமெரிக்க டாலர்களை பரிசாகவும் அவர்கள் பெற்றுள்ளனர்.