எதிர்வரும் 28-ம் தேதி காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பதக்கம் வெல்லும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 2018: ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018 வாக்கில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தடகளம், பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, மல்யுத்தம் என வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 26 தங்கங்களை வென்று சாதனை படைத்தது இந்தியா.

அதோடு 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கமும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வென்றிருந்தனர். இந்த முறை அதை விட கூடுதலாக பதக்கங்களை இந்தியா வெல்லும் என நம்பப்படுகிறது.

காமன்வெல்த் 2022 இந்தியா: இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். தடகளம், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், சைக்ளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, லான் பவுல்ஸ், பாரா பவர்லிஃப்டிங், ஸ்குவாஷ், நீச்சல், டேபிள் டென்னிஸ், டிரையத்லான், பளுதூக்குதல், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளில் இந்த முறை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்திய ஆடவர் ஹாக்கி அணி: மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி காமன்வெல்த் 2022-இல் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, கனடா, வேல்ஸ் மற்றும் கானா அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 1998 முதல் காமன்வெல்த்தில் ஹாக்கி விளையாடப்பட்டு வருகிறது. ஆறு முறையும் ஆஸ்திரேலிய அணி தங்கம் வென்றுள்ளது.

இதே காமன்வெல்த்தில் 2010 மற்றும் 2014 எடிஷனில் இந்திய அணி வெள்ளி வென்றுள்ளது. அதோடு மன்பிரீத் சிங் தலைமையிலான அணி தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தது. இதையெல்லாம் கணக்கில் வைத்து பார்த்தால் இந்திய ஆடவர் ஹாக்கி அணி இந்த முறை நிச்சயம் பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி தாஹியா: மல்யுத்த வீரர் ரவி தாஹியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார். ஆடவர்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் எடைப்பிரிவில் அவர் இந்தப் பதக்கத்தை வென்றிருந்தார். இதே எடைப் பிரிவில் அவர் காமன்வெல்த்தில் பங்கேற்கிறார். மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் போன்ற நட்சத்திரங்களும் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.

மாணிக்கா பத்ரா: டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் கடந்த காமன்வெல்த்தில் தங்கம் வென்று அசத்தி இருந்தார் டெல்லியை சேர்ந்த மாணிக்கா. 27 வயதான அவர் இந்த முறை தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒலிம்பிக்கில் அவர் மூன்றாவது சுற்று வரை முன்னேறி அசத்தியிருந்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: கிரிக்கெட் போட்டிகள் வரும் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. எட்டு நாடுகளை சேர்ந்த அணிகள் கிரிக்கெட் போட்டிகளில் இரண்டு பிரிவுகளாக விளையாடுகின்றன. டி20 பார்மெட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன. காமன்வெல்த் அரங்கில் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது இதுவே முதன்முறை.

இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பார்படாஸ் அணிகள் உள்ளன. முதல் சுற்றில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். இந்த சூழலில் தங்கம் தான் இலக்கு என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இதனை தெரிவித்துள்ளார். அவரது எண்ணத்தை போல இந்திய அணிக்கு காமன்வெல்த் சிறப்பான தொடராக அமையட்டும்.

பி.வி.சிந்து: இந்திய அணியின் பேட்மிண்டன் நட்சத்திரமான பி.வி.சிந்து 2016, 2020 என அடுத்தடுத்து இரண்டு முறை ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றி உள்ளார். இந்தியாவின் பதக்க நம்பிக்கைகளில் மிக முக்கியமானவர். அண்மையில் முடிந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து. அதே போல 2022 ஸ்விஸ் ஓபன் தொடரிலும் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பேட்மிண்டனில் லக்‌ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் போன்ற வீரர்களும் பதக்கம் வெல்லும் வாய்ப்புடையவர்களாக எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

மீராபாய் சானு: பளு தூக்குதலில் கடந்த ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப்பிரிவில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி வென்றிருந்தார். 2017 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2018 காமன்வெல்த்தில் தங்கம், 2014 காமன்வெல்த்தில் வெள்ளியும் வென்றுள்ளார். அதனடிப்படையில் இந்த முறை அவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் மீராபாய், அதிகபட்சமாக 207 கிலோ பளுவை தூக்குவார். இது தான் அவரது தனிப்பட்ட பெஸ்ட்டாக உள்ளது. அவருக்கு நைஜீரிய வீராங்கனை எதிர்வரும் காமன்வெல்த்தில் போட்டியாளராக இருப்பார் என தெரிகிறது.

நிகத் ஜரீன்: கடந்த மே மாதம் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரித்திர சாதனை படைத்திருந்தார் தெலங்கானாவை சேர்ந்த 25 வயதான நிகத் ஜரீன். 52 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜூடாமாஸ் ஜிட்பாங்கை (Jutamas Jitpong) 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் நிகத். அவர் அந்த பதக்கம் வென்ற போதே இந்தியாவுக்கு காமன்வெல்த்தில் குத்துச்சண்டையில் ஒரு பதக்கம் உறுதியானதாக சொல்லப்பட்டது. அதனை நிகத் நிஜமாக்குவார் என நம்புவோம்.

நீரஜ் சோப்ரா: இந்தியா சார்பில் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்களில் முதலிடத்தில் இருப்பவர் நீரஜ் சோப்ரா. கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னதாக முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்றிருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்க மகன்.

ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் (2018), தெற்காசிய விளையாட்டு, உலக இளையோர் சாம்பியன்ஷிப் என பல்வேறு விளையாட்டு தொடர்களில் தங்கம் வென்றுள்ளார் நீரஜ்.

இந்தியா மிஸ் செய்யும் நட்சத்திரங்கள்: சாய்னா நேவால் (பேட்மிண்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), தஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), தனலட்சுமி (தடகளம்), ஐஸ்வர்யா பாபு (உயரம் தாண்டுதல்), ராணி ராம்பால் (ஹாக்கி), கமல்ப்ரீத் கவுர் (வட்டு எறிதல்), விகாஸ் கிருஷ்ணன் (குத்துச்சண்டை), ஜேஸ்வின் (நீளம் தாண்டுதல்).