ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான பேட்மிண்டன் வீரர் குருசாய்தத் சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு செய்துள்ளார். 32 வயது ஓய்வு பெறும் வயதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பலதரப்பட்ட காயங்களினால் பாதிக்கப்பட்டு இனி பேட்மிண்டனைத் தொடர முடியாது என்ற நிலையில் ஓய்வு அறிவித்துள்ளார்.

ஆர்.எம்.வி. குருசாய்தத் 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்ற வீரர். குருசாய்தத் பிடிஐ செய்தி ஏஜென்சிக்குக் கூறும்போது, “என்னால் 100% பங்களிப்பு செய்ய முடியவில்லை. எனக்குப் பிடித்த விளையாட்டில் என்னால் சரியாக ஆட முடியவில்லை என்பது பேட்மிண்டனுக்கு செய்யும் நியாயமாகாது.

என் உடல் தகுதி நிறைவடையாமல் போய் விட்டது. அதனால் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறலாம் என்று முடிவெடுத்தேன். இது என் வாழ்நாளில் அதி உணர்ச்சிகரமான தருணம்” என்றார் குருசாய்தத்.

2008 காமன்வெல்த் இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றவர் குருசாய்தத். இதோடு உலக ஜூனியர் வெண்கலமும் வென்றுள்ளார்.

இப்போது தன் பேட்மிண்ட்டன் திறமைகளை இளையோருக்கு கடத்தும் முகமாக பயிற்சியில் ஈடுபடவுள்ளார். ”நான் உண்மையில் இந்திய அணியின் பயிற்சியாளராக காத்திருக்கிறேன், கோபி சாருடன் பணியாற்றியிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார் குருசாய்தத்.

2010 இந்தியா ஓபன் கிராண்ட் ப்ரீயில் குருசாய்தத் 2வது சிறந்த வீரராக முடிந்தார். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக வெள்ளி வென்றார். அதே தொடரில் அணி வென்ற தங்கப்பதக்கத்தில் குருசாய்தத் பங்களிப்பு முக்கியமானது.

2015-ல் பல்கேரியன் இண்டெர்னேஷனல் தொடரை வென்றார். 2012-ல் டாடா ஓபன் இண்டெர்னேஷனல் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார் குருசாய்தத். 2014 காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்தின் ராஜிவ் அவ்செப் என்ற வீரரை வீழ்த்தி வெண்கலம் வென்றது இவரது பேட்மிண்டன் கரியரில் மிக முக்கியமான தருணமாகும்.