தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 31) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.44,720-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,590-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.44,720-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,216 க்கு விற்பனையாகிறது. இதன்படி தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.7,500-ஆக இருக்கிறது.

முன்னதாக, இந்த மாதம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.44,480-க்கு விற்பனையானதே அதிக பட்ச விலையாக இருந்தது. அதற்கும் முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி பட்ஜெட் எதிரொலியாக ஒரு சவரன் ரூ.44,040-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை அடைந்தது. அதற்கு முன்பு, கடந்த 2020 ஆகஸ்ட் 7-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.43,360-க்கு விற்கப்பட்டதே, அதிகபட்ச விலையாக பதிவாகி இருந்தது. தற்போது அவற்றைக் கடந்து அதிக விலைக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.