சென்னை: ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடை மற்றும் பணிக்காலத்தில் இறந்த திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதி ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 28) வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருத்தணி, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற 69 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் காலஞ்சென்ற திருக்கோயில் பணியாளர் ஒருவரின் வாரிசுதாரர் ஆகியோருக்கு ரூ.2,70,09,752/- பணிக்கொடை வழங்கிடும் அடையாளமாக 12 ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு பணிக்கொடையும், மயிலாப்பூர்-கபாலீஸ்வரர் திருக்கோயில், வல்லக்கோட்டை-சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் மாமல்லபுரம்-ஆளவந்தார் அறக்கட்டளை ஆகியவற்றில் பணியாற்றி, பணிக்காலத்தில் இறந்த 3 திருக்கோயில் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல நிதியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், ஆகியோரும், காணொலிக் காட்சியின் வாயிலாக திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.