மும்பை: இந்திய ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் விற்பனையில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு சவால் கொடுக்கும் வகையில் ஹார்லி மற்றும் ட்ரைம்ப் (Triumph) பைக்குகள் அறிமுகமாகி உள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய இருசக்கர வாகன நிறுவனங்களின் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மறுபக்கம் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து களம் கண்டுள்ளது ட்ரைம்ப் நிறுவனம்.
இந்திய இருசக்கர வாகன ஓட்டிகளின் மனம் கவர்ந்த பெரிய சைஸ் ப்ரீமியம் பைக் என்றால் அது ராயல் என்ஃபீல்ட் தான். அதற்கு காரணம் விலை, சர்வீஸ், ஸ்பேர்ஸ் போன்றவையாக இருக்கலாம். இந்நிலையில், தற்போது ஹார்லி மற்றும் ட்ரைம்ப் நிறுவனத்தின் வருகையால் வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன் பெருகி உள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனங்களின் வருகை தன்னந்தனி காட்டு ராஜாவாக இருந்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தை விற்பனையில் ஆட்டம் காண செய்யுமா என்ற கேள்வியையும் எழ செய்கிறது.
இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் 59 சதவீதம் 110 சிசி திறனுக்கு கீழான வாகனங்கள் தான். 150 சிசி திறனுக்கு கீழான வாகனங்களின் விற்பனை சதவீதம் 26. ப்ரீமியம் இருசக்கர வாகனங்களின் விற்பனை விகிதம் 14 சதவீதமாக உள்ளது. அதில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பங்கு சுமார் 40 சதவீதம்.
இந்த நிலையில், இந்திய ப்ரீமியம் இருசக்கர வாகன சந்தையை டார்கெட் செய்து ஹார்லி மற்றும் ட்ரைம்ப் நிறுவனங்களின் வருகை அமைந்துள்ளது. ஹார்லி ஹெச்.டி எக்ஸ்400 பைக் இந்தியாவில் ரூ.2.29 லட்சத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ட்ரைம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஸ்பீடு 400 வாகனத்தின் விலை ரூ.2.33 லட்சம். இதற்கான முன்பதிவும் தொடங்கிய நிலையில் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவு காரணமாக முன்பதிவு கட்டணத்தையும் உயர்த்தி உள்ளதாக தகவல்.
ஹார்லி ஹெச்.டி எக்ஸ்400
வரும் நாட்களில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறதோ அதுவே இந்திய ப்ரீமியம் பைக் விற்பனையில் ஆதிக்க செலுத்தலாம்.