மதமாற்றத்துக்கு எதிராக இந்துஅமைப்புகள், மக்களை உள்ளடக்கிய அமைப்பை ஏற்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மையக் குழு கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். குழு உறுப்பினர்கள் ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், வி.பி.துரைசாமி, சி.பி.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் உள்ளிட்ட 11 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. பின்னர், செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியதாவது:
அரியலூர் வடுகபாளையம் சிறுமி, மதமாற்றத்துக்காக 2 ஆண்டுகள் முன்பு பள்ளி நிர்வாகத்தால் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி இறப்பதற்கு முன்பு நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் ஏன் வெளியிடப்படவில்லை.
குழு அமைத்து ஒரு வாரத்தில் காரணத்தை கண்டறிவதாக கூறிய சில மணி நேரத்தில், சிறுமி மரணத்தில் மதமாற்ற பிரச்சினை இல்லை என்று தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார். அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.
காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு திருநீறு, ருத்ராட்சம் அணிந்த2 மாணவர்கள் ரவுடிபோல இருப்பதாக கூறி ஒரு ஆசிரியர் அவமதித்துள்ளார். அனிதாவுக்காக குரல்கொடுத்தோர் இப்போது எங்கே உள்ளனர்.
தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும். மதமாற்றத்துக்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகள், மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம். மதமாற்றத்தில் இருந்துஉயிர் தப்பிய பல பெண்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
திமுக ஆட்சியில் இந்துக்கள் மிரட்டப்படுகின்றனர். மதுரையில் 150 ஆண்டுகள் பழமையானமுனீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. பட்டா இடத்தில் இருக்கும் கோயில்களும் இடிக்கப்படுகின்றன. திமுக ஆட்சி அமைந்தவுடன் பல இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கமலாலயத்தில் நேற்று நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் பொங்கல் சிறப்பு மலரை அண்ணாமலை வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சென்னையில் பதவி வகித்தமேயர்கள் சரியான திட்டங்களைசெயல்படுத்தாததால்தான் மழை வெள்ளம் வடியாத சூழல் உள்ளது.அரியலூர் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறுகிறார். இந்தவிவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். மரணத்தை வைத்து அரசியல் செய்யும் டிஎன்ஏ, பாஜகவுக்கு கிடையாது’’ என்றார்.