பள்ளிக்கல்வித் துறையினர் நடத்திய ஆலோசனை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பள்ளிகளை திறப்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12.30மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறைசார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப் பட்டிருக்கும் நிலையில், மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோக்கப்படும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் விவாதிக்கப்பட இருப்பதாகவும், நோய் பரவல் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்ததால், தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலைரயில், கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், செப்டம்பர் 1ஆம் முதல் தேதி 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டுள்ளன.
சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். ஒரு சில இடங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்ற பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்தநிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 14 ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஆலோசனை நடத்தினார். ஆகஸ்ட் மாதம் முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை ஆணையரும் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பல கட்ட ஆலாசனைகள் நடத்தப்பட்டன.
பள்ளிக்கல்வித் துறையினர் நடத்திய ஆலோசனை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி முடிவை முதலமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பின் போது வெளியிடுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.