சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பாதை ஜனவரி 16 ஆம் தேதி வரை மக்கள் பயன்பாட்டில் இருக்கும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதையை சேப்பாக்கம் திருநெல்வேலி கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழாவில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாநகராட்சி சார்பில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி துணை ஆணையர்கள் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மெரினா கடற்கரைக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பூக்கள் மற்றும் பலூன்கள் கொடுத்து வரவேற்றனர். சுமார் 200 மீட்டர் நீளமுள்ள மணல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பாதையில் மாற்று திறனாளிகள் தங்களது மூன்று சக்கர வாகனம் மூலமாக சென்று கடல் அலையை நேரடியாக கண்டுக்களித்தனர். மேலும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக கடல் அலையில் கால் வைப்பதும், கடலில் குளிப்பது மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. இது ஒட்டு மொத்தமாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் சந்தீப் சிங் பேடி,மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது 200 மீட்டர் நீளமும் 8 அடி அகலமும் கொண்டது. மாற்றுத் திறனாளிகளை கொண்டு செல்வதற்காக 5 சிறப்பு மூன்று சக்கர வாகனமும் 15 சாதாரண மூன்று சக்கர வாகனமும் மாநகராட்சி சார்பில் இந்த இடத்தில் உள்ளது.
இந்த தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக அமைப்பதற்காக கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் இடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. சுற்று சூழல் பாதுகாப்பான பொருட்களை கொண்டு மாற்று திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒரு வாரம் மட்டுமே இந்த சிறப்பு வழி இருக்கும் ஆனால் மக்கள் கோரிக்கை வைத்ததால் ஜனவரி 16 வரை நீட்டிக்கப்பட்டுகிறது.
இங்க வரும் மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும். பாதுகாப்பு பணிக்காக மாநகராட்சி காவல் ஆணையர் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்” என தெரிவித்தார்.