ஒரு நபர் கோவிட்-19 தடுப்பூசியை 24 மணி நேரத்திற்குள் 10 முறை போட்டு கொண்டுள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உலகம் முழுவதையும் கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கோவிட்-19 தொற்று பல நாடுகளில் கட்டுக்குள் வந்த நேரத்தில் இதன் புதிய வேரியன்ட்டாக குறிப்பிடப்படும் ஓமைக்ரான் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. Omicron வைரஸ் தீவிரமாக பரவுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பல நாடுகளும் மக்களை எச்சரித்து வருகின்றன. மேலும் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தி உள்ளன. இரண்டாம் அலை ஏற்படுத்திய அழிவுகளை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட ஆர்வம் இல்லாமல் இருந்த பல மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.

முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸுக்கு இடையே குறிப்பிட்ட காலம் இடைவெளி விட்டு தான் தடுப்பூசி போட்டு வருகிறது. ஆனால் ஒரு நபர் கோவிட்-19 தடுப்பூசியை 24 மணி நேரத்திற்குள் 10 முறை போட்டு கொண்டுள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் இன்னும் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு அதிகளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் சுதந்திரமாக வெளியே செல்லும் வகையில் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ள விருப்பம் இல்லாத சிலர், ஊசி போட்டு கொண்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சுதந்திரத்தை அனுபவிக்க எண்ணி, அடையாளம் வெளியிடப்படாத குறிப்பிட்ட நபருக்கு பணம் கொடுத்து தங்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தடுப்பூசி போட்டு கொள்ள சொல்லி உள்ளதாக நியூசிலாந்தின் உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருக்கின்றன.

தடுப்பூசிக்கு எதிரானவர்களிடம் பணம் பெற்று கொண்ட அந்த நபர் ஒரே நாளில் 10 வெவ்வேறு தடுப்பூசி மையங்களுக்கு சென்று, ஒவ்வொரு முறையும் வித்தியாசமான நபராக நடித்து உண்மையான நபருக்கு தடுப்பூசி பதிவுகள் அப்டேட் செய்யப்படுவதற்கு முன் தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து மற்ற நபர்களின் சார்பாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு ஒரே நாளில் 10 கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை பெற்றதாக கூறப்படும் குறிப்பிட்ட நபரிடம் நியூசிலாந்து சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டுள்ளதாக கூறி இருக்கும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் கூறி இருக்கிறது. நியூசிலாந்தை பொறுத்தவரை தடுப்பூசிகளை வெப்சைட் மூலமாகவோ, மருத்துவர் மூலமாகவோ புக் செய்யலாம் அல்லது மக்கள் வாக்-இன் மையங்களுக்குச் செல்லலாம். மேலும் தடுப்பூசி போட்டு கொள்ளும் ஒரு நபர் சுகாதாரப் பணியாளருக்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் உடல் அடையாளம் (physical address) ஆகியவற்றை மட்டுமே வழங்கினால் போதுமானது.

இதனிடையே ஒரே நாளில் 10 டோஸ் போட்டு கொண்டுள்ள அந்த நபரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதற்கு மக்கள் மற்றவர்களின் அடையாளங்களை பயன்படுத்துவதாக நியூசிலாந்து காவல்துறை எச்சரிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.