தமிழகத்தில் 4-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் அக்.10-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம்முழுவதும் கடந்த 12-ம் தேதி 40 ஆயிரம் மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. அன்றைய தினம் ஒரேநாளில் 28.91 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

2-வது கட்டமாக கடந்த 19-ம்தேதி 20 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற முகாமில் 16.41 லட்சம் பேருக்கும், 3-வது கட்டமாக கடந்த 26-ம் தேதி 23 ஆயிரம் இடங்களில் நடந்த முகாமில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் 4-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த வாரம் முகாம் இல்லை

அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அன்றைய தினம் முதல்வரின் உத்தரவுப்படி 12,500 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தினர் இந்தப் பணிகளில் முழுமையாக ஈடுபட உள்ளனர். அதனால், இந்த வாரம்ஞாயிற்றுக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) பெரிய அளவிலான மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்படும்.

அந்த மெகா முகாமில் இதுவரை இல்லாத வகையில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்படும். மக்கள் தொகைக்கு ஏற்பவும், ஏற்கெனவே சொன்ன மாதிரி நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிற அளவில் தடுப்பூசிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கொசு ஒழிப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.