தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவு 124 (ஏ)வை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனி நபர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கில அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துபவர்களை ஒடுக்க உருவாக்கப்பட்ட இந்த சட்டப் பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எடிட்டர் கில்டு, பொது நல அமைப்பு மற்றும் சில தனி நபர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், இவ்வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
முன்னதாக இவ்வழக்கு குறித்து ஆலோசிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா உள்ளிட்ட அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் தனியாக ஒரு அறையில் 25 நிமிடங்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.
அந்த ஆலோசனைக்குப் பின்னர் நீநிபதிகள், சட்டப் பிரிவு 124 (ஏ)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நாடு முழுவதும் எவ்வளவு பேர் சிறையில் இருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பினர். அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், நாடு முழுவதும் 13,000 பேர் இப்பிரிவின் கீழ் சிறையில் உள்ளதாகத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி என்.வி ரமணா, இவ்விவகாரத்தை விரிவாக விவாதித்தோம். தேசத் துரோக சட்டப் பிரிவு 124 (ஏ)வை பநன்படுத்துவது தற்போதைய சூழலுக்கு உகந்தது இல்லை என்றனர்.
மேலும், தேசத் துரோக சட்டப் பிரிவு 124 (ஏ) இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். தேசத் துரோக சட்டப் பிரிவை மத்திய அரசு மறுசீரமைப்பு அல்லது சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் வரை தேசத் துரோக சட்டப் பிரிவின்கீழ் எந்த வழக்கும் பதியக் கூடாது எனவும், அதுவரை உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், தேசத் துரோக சட்டப் பிரிவின் கீழ் மத்திய, மாநில அரசுகள் இடைக்காலமாக இனி எந்த வழக்கும் பதிவு செய்யாது என நம்புவதாகவும், ஒருவேளை இந்த இடைப்பட்ட காலத்தில் எவர் மீதேனும் தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடலாம் எனவும், நீதிமன்றமும் அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த 124 (ஏ) என்ற சட்டப் பிரிவின் மீது மத்திய அரசு ஒரு முடிவெடுக்கும் வரை இந்த சட்டப் பிரிவை நிறுத்திவைப்பதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பதால், தேசத் துரோக வழக்குப் பதியும் சட்டத்துக்கு இடைக்காலமாகத் தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.