கற்றல் திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்றல் கற்பித்தல் இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தக பையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதிலுரையில், சட்டப்பேரவையில் சபாநாயகர் தாளாளர் ஆகவும், முதலமைச்சர் தலைமை ஆசிரியராகவும் வழி நடத்தும் இந்த அவையில் இருப்பது பெருமை எனவும், நிதியமைச்சர் நியாயத்திற்கு மட்டும் கோபப்படும் ஆங்கிரி பேர்ட் (Angry bird) என குறிப்பிடுவோம், என்றார்.

பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.32,599.54 கோடி தொகை மக்களின் வரிப்பணம் எனவும், அதை மாணவர்களுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கியதாக கூறினார்.

கற்றல் திறனை அதிகரித்து இடைநிற்றலை குறைப்பது முக்கிய பணியாக மேற்கொள்ள உள்ளோம். மாணவர்கள் அதிகளவில் மதிப்பெண் எடுத்தாலும், கற்றல் திறனில் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். கற்றல் திறனில் நாட்டிலேயே 23வது மாநிலமாக நாம் இருக்கிறோம், 10 இடத்திற்குள் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். கற்றல் திறனை அதிகரிக்க ரூ.213.6 கோடி நிதியில் கற்றல் கற்பித்தல் இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டில் இந்தத் துறைக்கு 9 அமைச்சர்கள் மாற்றப்பட்டு, மியூசிக்கல் சேர் போல விளையாடியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தகப் பைகளில் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் (எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா) புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்ட போது, 13 கோடி ரூபாய் செலவில் அதனை மாற்றலாம் என கூறினோம்.

இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதை பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வேறு திட்டம் செயல்படுத்துவேன். அந்த புத்தகப்பையில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும், என பெருந்தன்மையுடன் பேசி அதை விட்டுக்கொடுத்ததாக கூறினார்.