கத்திப்பாரா மேம்பாலம் பாணியில் ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சென்னையின் மிக முக்கிய நெஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகருக்கும், ஈஞ்சம்பாக்கத்திற்கும் இடையில் ரூ.180 கோடி செலவில் சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை எல் அண்ட் டி நிறுவனம் தயார் செய்யவுள்ளது.

முன்னதாக, இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இளங்கோ நகர் – வெங்கடேசபுரம், வெங்கடேசபுரம் – காந்தி சாலை, வீரமணி சாலை – மணியம்மை சாலை, மணியம்மை சாலை – அம்பேத்கர் சாலை, அண்ணா நகர் – பாண்டியன் சாலை, காந்தி நகர் – பல்லவன் சாலை ஆகிய 6 இடங்களில் ரூ.30 கோடியில் பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. ஆனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.