‘கே.ஜி.எஃப் 2‘ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

‘கே.ஜி.எஃப்’ படத்தைத் தொடர்ந்து ‘கே.ஜி.எஃப் 2’ தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள், ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால், முதல் பாகத்தின் வெற்றியால் இந்தப் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது யாரும் எதிர்பாராதவிதமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப் 2‘ வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு பல்வேறு பெரிய படங்கள் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருப்பதால், ‘கே.ஜி.எஃப் 2’ படக்குழு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையைத் தேர்வு செய்துள்ளது. இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் 2’ வெளியாகவுள்ளது.