இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகியர்களுக்கு மணிமண்டபம்; அரசு வேலை வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (செப். 02) வெளியிட்ட அறிக்கை:
“தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 மாவீரர்களுக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும்; அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இந்தியா சந்தித்த மிகப்பெரிய சமூகநீதிப் போராட்டம் என்றால் அது வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி எனது தலைமையில் நடத்தப்பட்ட அறவழிப் போராட்டம் தான். ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து முன்னேறுவதற்காக உரிமை கேட்டுப் போராடிய மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு, கொடூரமானத் தாக்குதல் உள்ளிட்ட பல வழிகளில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்தத் தாக்குதலில் சமூக நீதிப் போராட்டத்தில் ஈடுபட்ட 21 மாவீரர்கள் கொல்லப்பட்டனர்.
பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 சமூகநீதிப் போராட்டக்காரர்களும் துப்பாக்கியால் சுட்டும், அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம் எனது தலைமையில் வன்னிய மக்கள் நடத்திய போராட்டத்தை சமூகநீதிப் போராட்டமாக தமிழக அரசு அங்கீகரித்திருக்கிறது. அத்தகைய சமூகநீதிப் போராட்டத்திலிருந்து உருவானது தான் பாமக ஆகும்.
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாமகவின் விருப்பமும், நோக்கமும் ஆகும். அந்த இலக்கை அடைவதற்காக பாமகவின் சமூகநீதிப் பயணம் தடையின்றி தொடரும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.