” மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் மெத்தனப்போக்கோடு அலட்சியமாக இருக்காமல்,உடனடியாக மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வெளியுறவுத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய – மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலம் தெங்னௌபல் மாவட்டத்தில் வசித்து வந்த மோகன், அய்யனார் என்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் தங்கள் நண்பர்களைக் காண்பதற்காக, மியான்மர் நாட்டு எல்லையிலுள்ள தமு என்ற இடத்திற்குச் சென்றபோது, அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவுப்பெற்ற ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு தமிழர்களும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடந்த காட்சிகள் உள்ளத்தை உறையச் செய்துவிட்டன.
உலகில் எந்த நாட்டு மக்களுக்குத் துயர் நிகழ்ந்தாலும் தமிழர் மண் அழுதிருக்கிறது; ஆயினும் தமிழர்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இன்றளவும் தொடர்கின்றன என்பது மிகுந்த வேதனைக்குரியது. உயிரிழந்த இருவரில் ஓட்டுநரான மோகன் அண்மையில் திருமணம் முடித்தவர் என்பது மனத்துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. உயிரிழந்த மோகன் மற்றும் அய்யனார் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அநியாயமாகக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் மியான்மர் அரசு தொடர் அலட்சியம் செய்வது, அந்நாட்டு அரசே கொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயல்கிறதோ என்ற ஐயத்தையும், தமிழர்கள் என்பதனாலேயே சுட்டுக்கொல்லப்பட்டனரா என்ற ஐயத்தையும் ஒருசேர எழுப்புகிறது. மியான்மர் நாட்டுத் தூதரை அழைத்துக் கண்டிக்காமலும், அந்நாட்டு அரசிடம் உரிய விளக்கம் கேட்காமலும் இந்திய மத்திய அரசு அமைதி காப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒருவேளை பாகிஸ்தான் நாட்டில் வடமாநில இளைஞர்கள் கொல்லப்பட்டிருந்தால் மோடி அரசு இப்படி வாய்மூடி அமைதி காத்திருக்குமா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுகிறது. குஜராத் மீனவர் ஒருவர் பாகிஸ்தான் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பாஜக அரசும், அதன் தலைவர்களும் எத்தகைய துரிதமாக எதிர்வினையாற்றினர் என்பதை யாரும் மறந்துவிடவில்லை.
ஆகவே, மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இனியும் மெத்தனப்போக்கோடு அலட்சியமாக இருக்காமல், தமிழர்களும் இந்த நாட்டின் அரசியலமைப்பை ஏற்று வாழும் குடிமக்கள்தான் என்பதைக் கவனத்தில் கொண்டு, உடனடியாக மியான்மர் நாட்டில் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் படுகொலைக்கு உரிய நீதியைப் பெற்றுத்தர வெளியுறவுத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.