புதுடெல்லி:  ‘கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது,’ என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை காவல்துறையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி விமர்சனங்களில் சிக்குவார். இந்நிலையில், நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், ‘, 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது,’ என்றார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வருண் காந்தி ஆவேசம்: பாஜ எம்பி.யான வருண் காந்தி தனது டிவிட்டரில், ‘இது தேச விரோத செயல். இதனை இப்படிதான் அழைக்க வேண்டும். இல்லையென்றால் அது நாட்டின் சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய அனைவருக்கும் செய்யும் துரோகமாகும். இதனை பைத்தியக்காரதனம் என்பதா அல்லது தேச துரோகம் என்பதா?,’ என கூறியுள்ளார். மேலும், கங்கனா பேசும் 24 வினாடி வீடியோவையும் இதனுடன் இணைத்துள்ளார்.

இந்தநிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரித்தி சர்மா மேனன் கங்கனா ரனாவத்துக்கு எதிராக மும்பை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், ‘கங்கனாவின் அவதூறு மற்றும் தேசத்துரோக கருத்துக்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும். அவர் மீது 504, 505, 124ஏ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.