சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய குடிமைப் பணி நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள உள்ள 80 மாணவர்களுக்கான “எண்ணித் துணிக” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சில மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார். ஐஏஎஸ் பணிக்காக இறுதியாக நடைபெறும் நேர்முக தேர்வு என்பது உங்களின் மனத்திடத்தை சோதிக்கும் தேர்வு என்று கூறிய ஆளுநர், “நீங்கள் திடமாகவும் எனர்ஜியாகவும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் மக்களுக்காக பணியாற்ற உள்ளீர்கள். சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும். பெண் அதிகாரிகள் புடவை கட்டத் தெரியவில்லை என்றால் புடவை கட்ட கற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் கோட் சூட் அணிந்து கொள்ளுங்கள்” என்றார்.
கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம், நிதானமாக பதில் அளியுங்கள் என்றும், செய்தி தாள்களில் வரும் செய்திகள் ஒருவரின் பார்வையாக இருக்கும் எனவே அதை நீங்கள் தேர்வு செய்ய கூடாது. நீங்கள் ஒரு சமூக ஆர்வலர்கள் கிடையாது, மக்களுக்காக பணியாற்ற கூடியவர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் நீங்கள் தான் நீங்கள் மற்றவர்கள் அல்ல, நீங்கள் மற்றவர்கள் கருத்தை கேட்கலாம். ஆனால், உண்மையை சொல்ல வேண்டும். பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்ல வேண்டாம். அதை சங்கடமாகவும் கருத வேண்டாம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், உங்கள் மனதில் தோன்றும் விமர்சனக் கருத்துகளையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்று இல்லை. சமூக ஆர்வலர்கள் வேண்டுமென்றால் அவர்கள் விருப்பப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம், அவர்கள் நினைத்ததை செய்யலாம். ஆனால், நீங்கள் இந்திய குடிமைப் பணிகள் அதிகாரியாக, அரசின் திட்டங்களையும், எண்ணங்களையும் உங்கள் கருத்துக்கு மாறாக இருந்தாலும் செயல்படுத்த வேண்டும் என்று பேசினார்.