ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் ஷாருக்கானின் ‘பதான்’ படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் 50-வது படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ’பதான்’ படத்தின் ஹிந்தி ட்ரெய்லரை நடிகர் ஷாருக்கான் வெளியிட, தமிழ் பதிப்பை நடிகர் விஜய் வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

’பதான்’ படத்தின் ட்ரெய்லரை பொறுத்தவரை தேசத்திற்காக உயிரை பணயம் வைக்கும் ராணுவ வீரரின் கதையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சண்டை காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் பலம் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகின்றது. ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரகாம் ஆகியோர் சண்டை காட்சிகளில் மிரட்டியுள்ளனர். 2.34 நிமிடங்கள் கொண்ட ட்ரெய்லரின் விருவிருப்பான பின்னணி இசை கூடுதல் பலம் சேர்ந்திருக்கிறது.

அண்மையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ”பேஷரம் ரங்” பாடலில் ஷாருக்கானுடன் காவி நிற பிகினி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடும் காட்சிகளுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்களில் ‘பதான்’ படத்தை திரையிட விடமாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்சாரிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு, சில திருத்தங்கள் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.