திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாங்குநேரி பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்துக்கு திமுக-வை சேர்ந்தவர்கள் தான் காரணம் என பொய்யான குற்றச்சாட்டை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாணவரின் தந்தை பாஜக உறுப்பினர் ஆவார். அவர், நாங்குநேரி வார்டு தலைவராக இருந்துள்ளார்.
பாஜக முன்னணி தலைவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மறைத்துவிட்டு திமுகவுக்கும், திமுக நிர்வாகிகளின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் பொய்யான தகவலை அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கைதான மாணவரின் தந்தை முன்னாள் அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்த புகைப்படம், பாஜக உறுப்பினர் அட்டை புகைப்படம் ஆகியவை உள்ளது. இதையெல்லாம் அண்ணாமலை மறைத்து திமுக மீது அவதூறு பரப்புவது அருவருக்கத்தக்க செயலாகும் என்று தெரிவித்துள்ளார்.