மத்தியப் பிரதேசத்தில் திருமண நிகழ்வின்போது மின் தடை காரணமாக மணமகள் மாறிய நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ளது அஸ்லானா கிராமம். இங்கு கடந்த 5 ஆம் தேதி (மே 5) சகோதரிகள் இருவருக்கு நடந்த திருமண நிகழ்வில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்தடைக்கு இடையே மணமக்கள் பூஜையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணமகள்கள் தங்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையுடன் அமராமல் தவறுதலாக மாறி அமர்ந்துள்ளனர். இந்த நிலையிலையே திருமண சடங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய சடங்குகள் கடந்தபிறகே திருமண ஜோடிகள் மாறி அமர்ந்துள்ளதை குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து சடங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு. அவர்கள் கூறிய திருமண உறுதி மொழிகள் திரும்பப் பெறப்பட்டன. அதன்பின்னர் மணமகள்கள் அவர்களுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மணமகன்களுடன் அமர்ந்து திருமணம் செய்து கொண்டனர். மணமகள்களின் உடை ஒரே மாதிரியாக இருந்ததே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மின்சாரம் நிறுத்தம் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் ஆளும் பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதுகுறித்து மத்தியப் பிரதேச காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவின் சிவராஜ் ஆட்சியில் நிலவும் மின்சார நெருக்கடியின் காரணமாக இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன”என்று பதிவிட்டுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. திருமணத்தின்போது மின்தடை எதுவும் ஏற்படவில்லை என்றும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.