சென்னை: வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல் துறை தலைமை இயக்குநர் வழிகாட்டுதலின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் நிலையங்களில் உள்ள முக்கிய வழக்குகளை விசாரிக்கவும், விரைந்து நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், 12 புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் (Investigation Wing -IW) துவங்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட புலன் விசாரணை பிரிவு காவல் நிலைய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கான 3 நாட்கள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர், இன்று (ஜூலை 27) காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.

இப்பயிற்சி முகாமில், சட்ட வல்லுநர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அரசு வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற மூத்த அரசு வழக்கறிஞர்கள், தடய அறிவியல்துறை நிபுணர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, வழக்கு விசாரணை தொடர்பான புதிய யுத்திகள், விசாரணை கையாளும் முறை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்து ஆலோசனைகள் வழங்கினர்.

இந்த புலன் விசாரணை பிரிவு காவல் நிலையங்கள் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் சென்னை பெருநகர காவலில் உள்ள 12 காவல் மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் செயல்படும் எனவும், இப்பிரிவினர் நிலுவையிலுள்ள முக்கிய வழக்குகளான கொலை, ஆதாயக்கொலை, கொள்ளை, வழிப்பறி, சந்தேக மரணம், ஆட்கடத்தல், வெடிபொருள் வழக்குகள், மத, சாதி ரீதியான மோதல் வழக்குகள் மற்றும் காவல் ஆணையாளர் குறிப்பிடும் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை மேற்கொள்வார்கள்” என காவல் ஆணையாளர் தெரிவித்தார்.