வரும் ஜூலை 1-ம் தேதி முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான டோக்கனைசேஷன் நடைமுறை அறிமுகமாக உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வப்போது புதுப்புது விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி நடைமுறைக்கு கொண்டு வரும். அந்தவகையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் டோக்கனைசேஷன் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. அதன்காரணமாக ஆன்லைன் வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் கார்டு குறித்த தரவுகளை இனி சேமிக்க முடியாது என தெரிகிறது.

இதற்கானக் காலக்கெடு கடந்த ஜனவரி 1-ம் தேதி என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இருந்தாலும் தொழில்துறையினரின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 1-ம் தேதிக்கு அது மாற்றப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் நடைமுறையின் மூலம் பயனர்கள் தங்களது கார்டு குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்காமல் பரிவர்த்தனையை ஆன்லைன் வழியே பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டோக்கன்கள் என்கிரிப்டட் வகையில் சேமிக்கப்பட்டு இருக்குமாம்.

ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதல்களில் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளரின் கார்டு விவரங்களை ஆன்லைன் வணிகர்கள் அழித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆன்லைன் வழியே டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் இதில் அடங்கும்.

கார்டு தரவுகள்: பொதுவாக கார்டு தரவுகள் என்றால் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் உள்ள 16 இலக்க எண், PIN, கார்டின் வேலிடிட்டி காலம், கார்டு அடையாள எண் போன்ற விவரங்கள் அனைத்தும் அடங்கியிருக்கும். இதை தான் தற்போது சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டோக்கனைசேஷன்? – கார்டு தரவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் மாற்று வகையில் ‘ஆல்டர்நேட்’ கோடுகளாக சேமிக்கப்பட்டு, அது டோக்கன்களாக வழங்கப்படும். இந்த டோக்கன்கள் கார்டு, டோக்கனைக் கோருபவர் (Requestor) மற்றும் டிவைஸுக்கு மட்டுமே தனிப்பட்டதாக இருக்குமாம். இதில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் டோக்கனைஸ் செய்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படி செய்யாதபட்சத்தில் ஆன்லைன் வழியில் ஒவ்வொரு முறையும் பொருள்களை வாங்கும் போது கார்டு குறித்த விவரங்களை வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.